வியாழன், 14 ஏப்ரல், 2011

நிபுணர்குழுவின் அறிக்கை சர்வதேச விசாரணைக்குழு நியமிக்க வேண்டும் என பரிந்துரை!

இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் பற்றி ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு சமர்ப்பித்துள்ள 220 பக்கங்களைக்கொண்ட அறிக்கை மகிந்த ராசபக்சவுக்கு நெருக்கமான முக்கிய அமைச்சர்களின் கைகளுக்கு கிடைத்திருப்பதாக கொழும்பில் உள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.


இந்த அறிக்கையின் இறுதிப்பகுதியில் இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும் இதனை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் நிபுணர்கள் குழு பான் கீ மூனுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்த அறிக்கையின் பெரும்பகுதி சிறிலங்கா அரசாங்கத்திற்கு பாதகமான விடயங்களே காணப்படுவதாகவும் இது சிறிலங்கா அரசாங்கத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் சிறிலங்காவின் முக்கிய அமைச்சர் ஒருவர் கொழும்பு ஊடகவியலாளர் ஒருவருக்கு தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை நிராகரிக்கும் வகையில் சில நடவடிக்கைகளில் சிறிலங்கா தரப்பு தற்போது ஈடுபட்டிருப்பதாகவும் இதற்காக சிறிலங்காவின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தமிழர் தரப்பு தலைவர்கள் சிலருடன் இன்று காலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் என்றும் கொழும்பில் உள்ள ஊடகம் ஒன்றின் முக்கிய பதவி வகிக்கும் அந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் தினக்கதிருக்கு தெரிவித்தார்.
போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஐநா  பொதுச்செயலாளருக்கு தெரிவித்த எந்த விடயமும் நிபுணர்குழுவால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கவலை கொண்டுள்ளன. சிறிலங்கா அரசாங்கம் தாம் நியமித்துள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நடத்தி வருகின்ற விசாரணை மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் மற்றும் ஐநாவிற்கான பிரதிநிதி பாலித கோஹனே. ஐநாவிற்கான இலங்கையின்
பிரதித் தூதர் மேஜர் ஜெனரல் சவிந்திர டி சில்வா , வெளியுறவுச் செயலாளர்  ரொமேஸ் ஜயசிங்கா ஆகியோர் ஐநா பொதுச் செயலாளர் மூனையும் நிபுணர் குழுவினரையும் இரகசியமாகச் சந்தித்து தெரிவித்த விடயங்கள் ஒன்றும் நிபுணர் குழுவினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் கொழும்பு வெளியுறவு அமைச்சு உயர்வட்டாரங்கள் கவலை கொண்டிருப்பதாக கொழும்பில் உள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் தினக்கதிருக்கு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக