புதன், 29 செப்டம்பர், 2010

போர்க்குற்றங்கள் தொடர்பில் காசாவுக்கு ஒரு நீதி வன்னிக்கு ஒரு நீதியா? கேள்வி எழுப்பியுள்ளது சனல் 4 ஊடகம்:

கடந்த வருடம் ஜனவரி மாதம் காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 1,400 பலஸ்த்தீனிய மக்கள் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளன. ஆனால் வன்னியில் கொல்லப்பட்ட பல ஆயிரம் மக்கள் தொடர்பான விசாரணைகள் இதுவரை ஆரம்பமாகவில்லை என பிரித்தானியாவை தளமாக கொண்ட சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது.


சிறீலங்காவில் போர் நிறைவுபெற்றுள்ளது ஆனால் அங்கு கொல்லப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.

கடந்த வருடம் ஜனவரி மாதம் காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட 22 நாள் நடவடிக்கையில் 1,400 பலஸ்த்தீனிய மக்கள் கொல்லப்பட்டதாக பலஸ்த்தீனம் தெரிவித்திருந்தது.

கடந்த வருடம் செப்ரம்பர் மாதம் அது தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்திருந்தது. அந்தக் குழுவுக்கு நீதிபதி றிச்சார்ட் கோல்ட்ஸ்ரோன் தலைமை தாங்கியிருந்தார்.

இரு தரப்பும் போர்க்குற்றங்களை மேற்கொண்டதாகவும், சில சந்தர்ப்பங்களில் மனிதாபிமானத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றங்களும் இனங்கணப்பட்டுள்ளதாகவும் விசாரணையின் முடிவு தெரிவித்துள்ளது.

ஆனால் சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. எந்த குற்றவாளியும் இனங்காணப்படவில்லை.

வன்னியில் இடம்பெற்ற போரில், இறுதி ஐந்து மாதங்களில் 7,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தபோதும், உண்மையான இழப்புக்கள் அதிகமாகும்.

வன்னியில் 30,000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் லூயிஸ் ஆர்பர் எமது செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் தலைவராக அவர் தற்போது பணியாற்றி வருகிறார்.

அமைதியை நிலைநாட்ட நீதியே முக்கியமானது. பொதுமக்களின் படுகொலைகளுக்கும், துன்பத்திற்கும் பதில் வேண்டும். ஆனால் அது எமக்கு இதுவரை கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் உள்ள தமிழ் மக்களை சமமாக நடத்துவதாக சிறீலங்கா அரசு தெரிவித்துவரும்போதும் அது நடைமுறையில் இல்லை. இந்த போலியான வாக்குறுதிகளை வழங்கிய சிறீலங்காவின் அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா இன்று கடவுளாக அல்லது அரசனாக ஆட்சி புரியும் அதிகாரத்தை கொண்டுள்ளார். அவருக்கு யாரும் சவால்விட முடியாது.

அவரை எதிர்ப்பவர்கள் ஒன்றில் நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் அல்லது சிறையில் இருக்க வேண்டும். எதிரிகளை அவர் அடக்கிவிடுவார். இந்த மாதத்தில் இருந்து மகிந்தாவுக்கு மேலதிக அதிகாரங்களை சிறீலங்கா நாடாளுமன்றம் வழங்கியுள்ளது.

ஜனநாயகம் செத்துவிட்டதாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் சக்திகள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது என சுயாதீன வர்த்தக அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது. ஆனால் யாரும் அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாதவாறு எல்லாம் அடக்கப்பட்டு விட்டது என அவர் தனது பத்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக