செவ்வாய், 28 செப்டம்பர், 2010

நாம் உயிருடன்!

கடலைத் தாண்டிவிட்டோம்

கரையைத் தொட்டுவிட்டோம்

இதுவரை நாங்கள் வெறுத்த

சிங்கள ஆமியைத்

தேடி வந்துவிட்டோம்

மீண்டும் ஒருமுறை

திரும்பிப் பார்த்தேன்

அங்கே,

தவறவிடப்பட்ட பொருட்களுடன்

சடலங்களும் மிதந்துகொண்டிருந்தன

மீண்டும் எங்களை சரிபார்த்துக்கொண்டேன்

எனது கணவர்,

எனது பிள்ளைகள் ,

கணக்கு சரி… அது யார், யாரோ?

நினைவில் செலுத்தி மீட்டிப் பார்க்க

ஒரு கணமும் மிச்சமில்லை,

எல்லாம் முடிந்து போனது

மரணச் சான்றிதழ் பெறமுடியாது

மண்ணுள் புதையுண்ட உடல்கள்

இருண்டுவிட்ட மாவீரர் மயானங்கள

இன்னும் தளராத நம்பிக்கையின்

அடையாளமாய் எங்கள் கைகளில்

பிறப்புச் சான்றிதழ்கள்,

கல்விச் சான்றிதழ்கள்,

நிவாரண அட்டைகள்,

கிளினிக் அட்டைகள்



- சசி -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக