தமிழ் ஈழம் என்பது கரைந்துபோன கனவுதான்’ என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருப்பது, அவர்களது ஆசையே தவிர… வேறு இல்லை!
தமிழ் ஈழம் என்பது ஒரு வரலாற்றுத் தேவை. சிங்களத் தீவில் சிக்கல் உற்ற இரு தேசிய இனங்களுக்கான தீர்வுத் திட்டம்தான் தமிழ் ஈழம். அதைக் கனவு என்று சொல்கிறவர்கள்தான் கனவு காண்கிறார்கள்.
ஒரு தேசிய இனத்தின் உரிமையில் நினைவு, கனவு ஆராய்ச்சிகளுக்கு இடம் இல்லை. தமிழ் ஈழம் என்பது உலகின் முதற்குடியும், மூத்த குடியுமான தமிழ் இனத்தின் தாய் மடி.
மகிந்த ராஜபக்ஷேவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்தவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயகா 1956-ல், ‘இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணம் தமிழர்களின் வழி வழித் தாயகம்’ எனக் கூறினார்.
1963 ஜூன் 5-ம் தேதி, சென்னையில் இருந்த இலங்கைத் தூதரகம் முன்பு நானும் சில நண்பர்களும் ஈழச் சிக்கலை முன்னிட்டு உண்ணாவிரதம் இருந்தோம். அப்போது எங்கள் உண்ணாநோன்பை முடித்துவைத்த மூதறிஞர் ராஜாஜி, ‘ஈழ மக்கள் வெளியில் இருந்து போய் இலங்கையில் குடியேறியவர்கள் அல்ல. அவர்கள் அந்த மண்ணுக்குச் சொந்தமான பழங்குடிகள்’ என்று பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்தார்.
இத்தனை உண்மைகளையும் புரியாதவர்கள்தான் தமிழ் ஈழம் என்பது கனவு எனச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
என் தாய் சிறையில் இருக்கலாம். கை உடைந்து, கால் உடைந்து கிடக்கலாம். ஆனாலும், அவள்தான் என் தாய். தமிழ் ஈழம் என் தாயகம். அதை மறுக்கவோ, ஏளனம் செய்யவோ, எந்தக் கொம்பனாலும் முடியாது. ‘ஒழிந்தது, முடிந்தது’ என ஒப்பாரி வைக்கவும், எங்கள் போராட்டத்தின் அந்திம காலத்தை முடிவு செய்யவும் யாருக்கும் உரிமை இல்லை.
40 ஆயிரம் இளம் விடுதலைப் புலிகள் தாயக விடு தலைக்காக தங்கள் உயிர்களைத் தூக்கி எறிந்து பூக்களாய், பிஞ்சுகளாய் உதிர்ந்தார்களே… அவர்கள் சிந்திய செங்குருதி விதைகள் நிச்சயம் ஒரு தினம் பயிராகி, அறுவடை ஆகும். அந்த நாள் தள்ளிப்போய் இருக்கிறதே தவிர, அற்றுப் போய்விடவில்லை.
புலிகளின் நான்காம் கட்டப் போரை சிலர் முடிவு என்று எண்ணுகின்றனர். அது முடிவல்ல. திருப்புமுனை. எதிரிகளின் கொடிய இன ஒழிப்பு கொலை வெறி ஆட்டத்தை அந்தப் போர்தான், உலகின் நெஞ்சில் ஆழப் பதியச்செய்தது. தந்தை செல்வா வழியில், நாங்கள் தொடர்ந்து அறப்போர் நடத்தி இருந்தால், எங்கள் உண்ணாநோன்பையும், கதவடைப்பையும் உலகம் திரும்பிப் பார்த்திருக்குமா? தலைவர் பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போர் தொடங்கிய காலத்தில், உடும்பன்குளத்தில் 60 தமிழர்கள் சிங்களப் படைகளால் உயிரோடு கொளுத்தி எரிக்கப்பட்டார்கள். சத்ருகொண்டானில் 100 தமிழர்கள் சிங்களப் படை வீரர்களால் வெட்டி சாய்க்கப்பட்டார்கள். வன்னியில் 200 தமிழர்கள் பிணங்களாக்கப்பட்டனர். ஆனால், உலகத்தின் கண்களுக்கு 100 சாவு, 200 சாவு என்பது எல்லாம் மிகச் சிறிய எண்ணிக்கை. ருவாண்டாவைப்போல, கம்போடியாவைப்போல உலகம் ஆயிரக்கணக்கில் பிணங்களை எதிர்பார்க்கிறது – கொஞ்சமாவது திரும்பிப் பார்க்க!
கட்டுப்படுத்த யாருமற்ற தற்போதைய சூழலில் தமிழ் ஈழ தேசியத்தின் தனித்தன்மையை அழிக்கும் முயற்சிகள் இலங்கையில் முழுவேகத்தில் நடை பெற்று வருகின்றன. தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் ஏற்படுத்தி, தமிழர் நிலத்தைப் பிடுங்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. தமிழர்களின் பூர்வீகப் பிரதேசங்களில் புத்த விகாரைகள் நிறுவப்படுகின்றன. தமிழ் ஊர்களின் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றம் செய்யப்படுகின்றன. ராணுவத்துக்கு வீடு கட்டிக் கொடுப்பதன் பெயராலும், சுற்றுலாக் குடியிருப்பின் பெயராலும், சிங்களக் குடியேற்றங்கள் துரிதகதியில் நடக்கின்றன.
பிரபாகரன் காலத்தில் தமிழ் ஈழத்தின் ஓர் அங்குலம் நிலத்தைக்கூட சிங்களர்களால் பிடுங்க முடியவில்லை. இப்போது எஞ்சி இருக்கும் தமிழ் ஈழப் பகுதி முழுக்கவும் சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்ட வகையில் செய்யப்படுகின்றன.
ஈழத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் போர், ஓர் அரசுக்கும் ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கும் இடையிலான போர் என உலகம் சித்திரித்தது. அது ஓர் ஒடுக்கிய தேசிய இனத்துக்கும், ஒடுக்கப்பட்ட தேசிய இனத்துக்குமான போர் என்று பார்க்க உலகம் தவறிவிட்டது.
1958-ல் ஒரு தமிழச்சியின் வயிற்றைக் கிழித்து, குழந்தையை வெளியே எடுத்து சுவரில் அடித்துக் கொன்றனர் சிங்கள இன வெறியர்கள். இதை நான் சொல்லவில்லை. ‘தார்சி வித்தாச்சி’ என்ற சிங்கள பத்திரிகையாளர் ‘எமர்ஜென்ஸி 58′ என்ற ஆங்கில நூலில் எழுதி இருக்கிறார்.
10 ஆண்டுகள் முன்பு அம்பாறை மாவட்டத்தில், ‘கோணேஸ்வரி’ என்ற தமிழ்த் தாயை பாலியல் வன்முறை செய்து அவளது பெண்குறியில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்தனர் சிங்கள இனவெறியர்கள்.
2008-ல் முள்ளிவாய்க்காலில் பல ஆயிரம் கர்ப்பிணிகளை சிங்களக் குண்டுகள் கர்ப்பப்பையைக் கிழித்து சிதைத்தன. இத்தனைக்கும் தீர்வு தனித் தமிழ் ஈழம் மட்டுமே!
நன்றி: ஜீனியர் விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக