செவ்வாய், 28 செப்டம்பர், 2010

பான் கீ மூன் தான் நியமித்திருந்த நிபுணர்குழுவை தானே உதாசீனப்படுத்துகின்றாரா? நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றிபிரஸ் கேள்வி.

இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருந்த நிபுணர்குழுவை அவரே உதாசீனப்படுத்துகின்றாரா? என்று நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றிபிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பாக இன்னர்சிற்றி பிரஸின் நிருபர் மத்தியூ ரஸல்லீ தமது செய்தி ஆய்வில் குறிப்பிட்டிருப்பதாவது;

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் செப்டெம்பர் 24 இல் இடம்பெற்ற பான் கீ மூனின் சந்திப்புத் தொடர்பான அறிக்கையை ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் விநியோகித்தார். அதற்கு

சிறிது நேரத்தின் பின்னர் ராஜபக்ஷ அறிக்கையொன்றை விடுத்திருந்தார். இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான அதிகாரம் எதனையும் ஐ.நா. குழுவானது கொண்டிருக்கவில்லையென்று பான் கீ மூன் தமக்குத் தெரிவித்ததாக ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக அவதானிக்கக்கூடியதாக குறைந்தது மூன்று கேள்விகள் எழுந்துள்ளன. ஐ.நா. குழு தொடர்பாக ராஜபக்ஷவிடம் பான் கீ மூன் உண்மையில் கூறியிருந்தால் பான் கீ மூனின் அறிக்கையில் ராஜபக்ஷவின் சொந்த ஆணைக்குழு தொடர்பாக மட்டுமே ஏன் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஏன் ஐ.நா. வின் குழு பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இத்தகைய நிலையில் பான் கீ மூனின் சந்திப்புகள் தொடர்பான ஐ.நா. வின் அறிக்கைகளை ஒருவரால் நம்ப முடியுமா? அல்லது அதில் தங்கியிருக்க முடியுமா?

அத்துடன்இ பான் கீ மூன் ராஜபக்ஷவுக்கு இவ்வாறு தெரிவித்திருந்தால் நிபுணர் குழுவானது ஏதாவது அதிகாரத்தைக் கொண்டிருக்குமா என்ற விடயத்தை முழுமையாக உதாசீனம் செய்வதாக அமைந்திருக்காதா?

மூன்றாவதாக பான் கீ மூன் இதனைக் கூறியிருக்காவிடில் ஐ.நா. இந்த விடயம் தொடர்பாக சீர்செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐ.நா. எப்போது கோரிக்கை விடுக்கப்போகிறது?

செப்டெம்பர் 24 இல் இன்னர்சிற்றிபிரஸ் செய்தியை வெளியிட்டிருந்தது. பான் கீ மூனுக்கும் இலங்கைக்குமிடையிலான சந்திப்புத் தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டிருந்தது.

நைஜீரிய ஜனாதிபதியுடனான அவர்களின் (ஐ.நா.) சந்திப்புத் தொடர்பான அறிக்கையை வெளியிடுவதிலும் பார்க்க குறிப்பிடத்தக்களவில் நீண்டநேரத்தின் பின்னர் இலங்கை தொடர்பான சந்திப்பு பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டிருந்ததாக இன்னர்சிற்றி பிரஸ் தெரிவித்திருந்தது.

ஐ.நா. அதிகாரிகளால் மாற்றம் தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கங்கள் பற்றி இன்னர்சிற்றி பிரஸ் புரிந்துணர்வைக் கொண்டுள்ளது. அந்த அறிக்கைச் சுருக்கத்தில் பான் கீ மூன் கூறியவை மட்டுமே உள்ளடக்கப்படுமாகவிருந்தால் அவர் சந்தித்த அரசாங்கம் தெரிவித்த விடயங்கள் இல்லாமல் இந்த அறிக்கை விநியோகிக்கப்பட்டிருக்கின்றதென்ற புரிந்துணர்வையே இன்னர்சிற்றி பிரஸ் கொண்டிருக்கிறது.

செப்டெம்பர் 24 இல் ஜனாதிபதி ராஜபக்ஷவுடனான பான் கீ மூனின் சந்திப்புத் தொடர்பான அறிக்கையில் ஜனாதிபதி கூறிய விடயம் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால், இதுவொரு கூட்டறிக்கையாகும். அதாவது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அரசாங்கத்துடன் இணக்கம் காணப்பட்ட அறிக்கையாக அது அமையும்.

இந்த விடயங்களில் இருதரப்பும் அதாவது ஐ.நா.வும் அரசாங்கமும் இணக்கம் காணப்பட்ட அறிக்கையை விடுத்ததாக தெரிகிறது. இந்த அறிக்கையானது இணக்கம் காணப்பட்ட அறிக்கையாக அமைந்தால் பான் கீ மூன் தனது சொந்தக் குழுவின் அதிகாரத்தை புறந்தள்ளுவதாக அமைவதாக காணப்படுகிறது. இது தொடர்பாக ஐ.நா. எவ்வாறு பதிலளிக்கும் என்று இன்னர்சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

நியூயோர்க்கில் இலங்கை தொடர்பான தனது குழுவிற்கு இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு எந்த வகையிலும் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்குத் தெரிவித்ததாக ஜனாதிபதியின் அலுவலகத்திலிருந்து விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, செயலாளர் நாயகத்திற்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்புத் தொடர்பாக ஐ.நா. வின் பேச்சாளர் விடுத்த அறிக்கையில்; மே 2009 இல் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் நிலுவையாகவுள்ள விடயங்களை துரிதமாக முன்னெடுக்க வேண்டிய தேவை குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனான செயலாளர் நாயகத்தின் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசியல் இணக்கப்பாடு,நல்லிணக்கம்,பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பான விடயங்களை துரிதமாக முன்னெடுக்க வேண்டிய தேவை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டதாக ஐ.நா. பேச்சாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்களுக்குத் தீர்வு காண்பதற்கான தமது உறுதிப்பாட்டை மேற்கொள்வதற்கான வலுவான அரசியல் அதிகாரத்தைக் கொண்ட தனித்துவமான வாய்ப்பு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் கோடிட்டுக் காட்டியிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், தேசிய நல்லிணக்கத்தின் முக்கியமான விடயமாக வடக்கில் அபிவிருத்தி மற்றும் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி கோடிட்டுக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான மீள்கட்டுமான புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி உதாரணம் காட்டியுள்ளார். அத்துடன், கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து செயலாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி தெரிவித்திருப்பதாகவும் ஐ.நா. பேச்சாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. செயலாளர் நாயகம் பதவியேற்பதற்கு முன்பாக ராஜபக்ஷவுடனான பான் கீ மூனின் தனிப்பட்ட உறவுகள் தொடர்பாக பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நீசேர்க்கியிடம் நீண்டகாலத்திற்கு முன்னர் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதாக உறுதிமொழியளிக்கப்பட்டிருந்தது. அந்த உறுதிமொழிகளுக்கு என்ன நடந்தது? என்று இன்னர்சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக