மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் புலி உறுப்பினர்கள் இராணுவப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவதாகவும் அவர்களிடம் கருணாவின் ஆயுதக்கிடங்குகள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
2004ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற கருணா தனது கட்டுப்பாட்டுக்குள் இருந்த புலிகளின் மட்டு.அம்பாறை கட்டமைப்பைக் கலைத்துவிட்டு சிங்கள் அரசின் பக்கம் தாவினார். அச்சந்தர்ப்பத்தில் புலிகளியக்கத்தை விட்டு வெளியேறிய பலர் பாதுகாப்பு கருதி வெளிநாடுகளிக்கு தப்பிச்சென்றிருந்தனர். தற்போது நாட்டில் சமாதானம் தோன்றியுள்ளதாக கூறப்படும் நிலையில், நாடு திரும்பும் முன்னாள் புலிகளின் உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மலேசியாவிலிருந்து நாடு திரும்பியிருந்த கிரான் பிரதேசத்தை சேர்ந்த பகிரதன் எனும் இயக்கப்பெயருடைய இளைஞன் ஒருவன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார், விசாரணைகளின் போது புலிகள் இயக்கத்தில் கருணா இருந்தபோது கிழக்கு மாகணத்தில் பயன்படுத்தி ஆயுதக்கிடங்குகள் தொடர்பாகவும் கருணாவுக்கு நெருக்கமான முன்னாள் போராளிகள் தொடர்பாகவும் கேட்கப்பட்டதாக அவ்விளைஞன் தெரிவித்துள்ளார்.
விசாரனைக்குட்படுத்தப்பட்ட பகிரதன் புலிகளியக்கத்திலிருந்தபோது கருணாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் என தெரியவருகின்றது. கருணா சிங்கள அரசுடன் இணைந்திருந்தாலும் அவரிடம் ரகசிய ஆயுதக்கிடங்குகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இரகசியமான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக