தேன்கூடு என்று நினைத்து குளவிக்கூட்டில் கையைவிட்ட கதையாகிவிட்டது அசின் விவகாரம்.
ராஜபக்சே அரசு தந்த சில சலுகைகள் மற்றும் பரிசுகளுக்கு ஆசைப்பட்டு இலங்கை க்குப் போய், அவரது கொபசெ ரேஞ்சுக்கு மருத்துவமனைகளைப் பார்வையிட்டும, இலவச கண் சிகிச்சை முகாம்களைத் துவக்கிவைத்தும் தனது சிங்கள விசுவாசத்தைக் காட்டினார் அசின்.
அவர் நடத்திய முகாமில் ஏராளமான தமிழர்களுக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டது. முள்வேலி முகாம்களில் வசிப்பவர்களில் 10 ஆயிரம் ஈழத்தமிழர்களுக்கு கண் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் அசின்.
இந்த நிலையில் அசின் நடத்திய மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்ற 10 பேருக்கு பார்வை பறிபோய் விட்டதாக மே 17 அமைப்பின் பொறுப்பாளர் திருமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நடிகை அசின் இலங்கை அரசுடன் சேர்ந்து நடத்திய கண் சிகிச்சை முகாமில் உள்நோக்கம் உள்ளது.
ஈழத் தமிழர் முகாம்களுக்குள் செல்ல பன்னாட்டு அமைப்புகளை சிங்கள அரசு தடுக்கிறது. ஆனால் அசினை மட்டும் அனுமதித்தனர், சகல அரசு உதவிகளுடனும்.
இப்போது இந்த முகாம்களில் சிகிச்சைப் பெற்ற 10 பேருக்கு பார்வை முற்றிலுமாக பறிபோய் உள்ளது. இன்னு் பலர் வெவ்வேறு சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
அசின், இந்தி படப்பிடிப்புக்காக அவர் இலங்கை சென்றது தவறு. அசின் படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய தமிழ் பிலிம் சேம்பர் அனுமதிக்கக் கூடாது.
படப்பிடிப்புக்கு இலங்கை செல்லும் நடிகர் , நடிகைகளின் படங்கள் தென் இந்தியாவில் திரையிடப்படமாட்டாது என திரைப்படக்கூட்டுக்குழு அறிவித்தது. அதை மீறி அசின் இலங்கை சென்று வந்துள்ளார். எனவே ரெடி படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது.
இந்தி நடிகர் விவேக் ஓபராயும் இலங்கை சென்று வந்துள்ளார். அவரது ரத்த சரித்திரம் படத்தையும் தென் இந்தியாவில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கக்கூடாது, என்றார்.
அசின் சென்னைக்கு வந்தால் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக