இலங்கை கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்களால் தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய இடங்களில் விசைப் படகு துறை முகங்கள் உள்ளன. இந்தத் துறைமுகங்களில் உள்ள சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளின் மூலம் இந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்கின்றனர்.
இதன்மூலம் 3 ஆயிரம் தொழிலாளர்களும், 500-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளும் பயன் அடைந்து வருகின்றனர். இந்த இரண்டு துறைமுகங்களின் மூலம் பல லட்சம் ரூபாய்க்கு வியாபார பரிவர்த்தனையும் நடைபெற்று வருகிறது.
இப் பகுதி மீனவர்கள் இந்தியா - இலங்கை எல்லையில்தான் மீன்பிடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில், தற்போது இலங்கைக் கடற்படையினர் இந்திய எல்லைக்குள்ளேயே வந்து தமிழக மீனவர்களை விரட்டி அடிக்கின்றனர்.
எனவே, தமிழக மீனவர்கள் முழுமையாக மீன்களைப் பிடிக்க முடியாமல் பாதியிலேயே கரை திரும்ப வேண்டியுள்ளது. இதனால், ஓர் விசைப் படகுக்கு தினமும் 3 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்படுகிறது. இலங்கைக் கடற்படையினரின் எல்லை தாண்டிய அத்துமீறல்களால், விசைப் படகில் சென்று மீன்பிடிக்கும் தொழிலாளர்கள் கடலுக்குள் செல்லப் பயந்து, மற்ற தொழிலை நாடிச் செல்லும் நிலை ஏற்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 800 விசைப் படகுகளில் சென்று கடலில் மீன்பிடித்து வந்தனர்.
இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதல்களால், தற்போது 200-க்கும் குறைவான விசைப் படகுகள் மட்டுமே கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்கின்றன.
இதனால், 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து விசைப் படகு உரிமையாளர் சண்முகம் கூறியது:
மீன்பிடித் தொழிலை பரம்பரையாகச் செய்து வருகிறோம். தற்போது இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி, தமிழக எல்லைக்குள்ளேயே வந்து எங்களை விரட்டி அடிக்கின்றனர்.
மேலும், விசைப் படகில் உள்ள வலை, தளவாடப் பொருள்களையும் வெட்டி கடலில் எறிகின்றனர். இதனால், நஷ்டம் ஏற்படுகிறது.
இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லத் தயங்குகின்றனர். இதனால், விசைப் படகுகளை கரையிலேயே நிறுத்த வேண்டியுள்ளது.
இலங்கை மீனவர்கள் தமிழகம் வந்து சென்ற பிறகு, இலங்கைக் கடற்படையினரின் அட்டூழியம் அதிகரித்துள்ளது.
இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலைக் கண்டித்து 2 மாதங்களுக்கு ஒரு முறை வேலைநிறுத்தம் செய்கிறோம்.
ஆனால், மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்வதில்லை. இனிமேலாவது, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
மீனவர் ராசு கூறியது:
இலங்கைக் கடற்படையினர் அடித்து விரட்டுவதால், நாங்கள் மீன் பிடிக்காமல் பாதியிலேயே கரை திரும்ப வேண்டியுள்ளது.
கடற்படையினர் மட்டுமன்றி இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். எங்களுக்கு இந்தியக் கடற்படையினர் மூலம் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
தமிழகத்தில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து, இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
கடற்படையினர் மட்டுமன்றி இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளனர்.
எங்களுக்கு இந்தியக் கடற்படையினர் மூலம்
பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக