30 வருடங்களாக இடம்பெற்று வந்த உள்நாட்டு போர் காரணமாக இடம்பெயர்ந்து மலேசியாவில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்து வாழ்ந்துவரும் இவ்வேளையில் தங்களின் சுயலாபத்திற்காக அவர்களை அடமானம் வைக்க மாற்றுசெயலணி தலைவர் எனக் கூறும் கலைவாணரும் அவருடன் சேர்ந்து இயங்கும் சிலரும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மலேசிய கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 72 தமிழீழ அகதிகளை மலேசியாவில் இயங்கும் மனித உரிமைக்குழுக்கள் மற்றும் தமிழீழப் பற்றுகொண்ட சில அரசியல் முக்கியஸ்தர்கள் தங்களது அயராத முயற்சியினால் அவர்களை மீட்டெடுத்தார்கள். இச் சந்தர்ப்பத்தில் இவ் அகதிகளை தாங்கள் தான் அரசாங்கத்துடன் பேசி மீட்டோம் என கலைவாணர் பத்திரிக்கைகளில் பிரச்சாரம் செய்து வந்தார். அந்த அகதிகளுக்கு உதவி செய்வதாக கூறி புலம்பெயர் நாடுகளில் வாழும் அவர்களின் உறவினர்களிடம் பணத்தை பெற்றார் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
அந்த 72 அகதிகளை வைத்துப் பல அமைப்புகளிடமும் மலேசிய தமிழர்களிடமும் கலைவாணர் பணம் வசூலிக்க முற்பட்டபோது அவரின் சுயரூபத்தை அறிந்த அந்த அகதிகள் அவரை கைநழுவிவிட்டனர். இதனை பொறுத்துக்கொள்ளமுடியாத அவர் அந்த அகதிகளிடம் சென்று “அகதிகள் நாய்களே என்னையே ஏமாற்றி விட்டீர்களா” என திட்டியிருக்கிறார் அத்துடன் இவரின் சுயநலம் கொண்ட செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த சில தமிழீழ இளைஞர்களை தனது அடியாட்களை வைத்து தாக்கியுள்ளதோடு கொலைமிரட்டலும் விடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அந்த அகதிகள் மனித உரிமை அமைப்புகள் பலவற்றில் முறையிட்டுள்ளனர்.
இதற்கிடையில் நாளை 24ஆம் தேதி தமிழீழ அகதிகளுக்காகக் “தமிழீழ அகதிகள் மாநாடு” ஒன்றை நடத்தப்போவதாகக் கலைவாணர் கூறுகிறார்.
யார் யாருக்கு மாநாடு நடத்துவது?
இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அரசுசாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் மலேசியாவில் வாழும் தமிழீழ அகதிகளுக்கும் அழைப்புவிடுத்துள்ள போதிலும் இம்மாநாட்டிற்கு ஈழஅகதிகள் மற்றும் சமூதாய நோக்கம் கொண்ட பல அரசுசாரா அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துவருவதால் அதில் யாரும் கலந்துகொள்ளமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இம்மாநாட்டின் மூலம் கலைவாணர் சாதிக்க நினைப்பது தமிழீழ அகதிகளுக்கெனக் கூறி அம் மாநாட்டில் அரசுசார அமைப்பொன்றை நிறுவி அதன் மூலம் மலேசியா அரசிடம் இருந்து அரச மானியத்தையும் வெளிநாட்டு அரசுசாரா அமைப்புகளிடமிருந்து பணத்தினைப் பெற்று தங்களது சுகபோக வாழ்க்கைக்குப் பயன்படுத்துவதே.
இவ்வாறு மாற்றுச் சிந்தனை கொண்ட மாற்றுச் செயலணித் தலைவரின் மட்டமான சிந்தனைக்கு மலேசியாவில் அகதிகளாக வாழும் தமிழ் உறவுகள் துணைபோகக்கூடாது.
பல இன்னல் துயரங்களுடன் கடல் கடந்து மலேயசிய நாட்டில் அகதிகளாக வாழ வந்திருக்கும் அந்த உறவுகளிடம் கலைவாணர் போன்ற ஏமாற்றுப்பேர்வழிகள் சிலர் செய்துவரும் திட்டத்தினை மழுங்கடிப்பதற்கு மலேசிய இந்தியச் சமூதாயம் இவ்விடயத்தில் சற்று அக்கறை காட்டவேண்டும்.
தனி நபரின் சிந்தனையில் சுயநல போக்குகளை முன்வைத்து அரங்கேற்றப்படும் இந்த மாநாட்டிற்கு மலேசியாவில் வாழும் தமிழீழ அகதிகளோ மற்றும் எந்தவொரு அரசுசாரா இயங்கங்களோ அதிகாரிகளோ கலந்தகொள்ளவேண்டாம் என்பதை இதன்வழி அறிவித்துக்கொள்கிறோம்.
மலேசிய தமிழீழ அகதிகளின் நலம்சார்ந்தோர் அமைப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக