வியாழன், 11 நவம்பர், 2010

யேசிடி மதமும், அடக்கப்பட்ட கடவுளின் மக்களும்

உலக வரலாற்றில் பல சிறிய மதங்கள், அரசியல் அதிகார பலம் இல்லாத காரணத்தால் அழிக்கப்பட்டு விட்டன. இன்றைக்கும் பெரும்பான்மை மதங்களின் அடக்குமுறைக்கு தப்பிப் பிழைத்து வாழும் மதம் ஒன்றைக் குறித்த தகவல் இது. மத்திய கிழக்கில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் தோன்றிய காலத்தில், "யேசிடி" (Êzidî) மதமும் தோன்றியது. இன்றைய ஈரான், ஈராக் பகுதிகளில், சரதூசரின் மதத்தை பின்பற்றியவர்கள் பெரும்பான்மையோராக வாழ்ந்தனர். அவர்களின் முழுமுதற் கடவுள் அஹூரா மாஸ்டா. சரதூசர் இறைவனின் தூதர். இந்த மதத்தின் வழிபாட்டு முறைகள் சில, யேசிடி மதத்தில் காணப்படுகின்றது. யேசிடி யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய தத்துவங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. இதனால் யேசிடி மக்களை யூதர்கள் என்றும், கிறிஸ்தவ பிரிவு என்றும், இஸ்லாமியப் பிரிவு என்றும் பலர் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். யேசிடிகள் ஐந்து நேரம் தொழுகை செய்வது, இஸ்லாமியரின் வழிபாட்டு முறையை ஒத்திருக்கலாம். ஆனால் இஸ்லாமியர்கள் மெக்காவை நோக்கி வழிபடும் அதே நேரம், யேசிடிகள் சூரியனை நோக்கி வழிபடுகின்றனர். யேசிடி மதத்தினர், மயிலை கடவுளாகவும், தேவதையாகவும் (Melek Taus) வழி படுகின்றனர்.

யேசிடி மதத்தவர்கள் "மயிலின் மக்கள்" என்று அழைக்கப் படுகின்றனர். யேசிடி மதத்தை ஸ்தாபித்த Sheikh Adi Ibn Musafir மயில் தேவதையின் அவதாரம் என நம்புகின்றனர். மயில் தேவதை பற்றிய கதை, இஸ்லாமியராலும், யேசிடிகளாலும் நம்பப் பட்டு வருகின்றது. ஆனால் இரு மத நம்பிக்கையாளர்களும் அதனை இரண்டு வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்க்கின்றனர். இறைவன் முதல் மனிதனான ஆதாமை படைத்த பின்னர், அனைத்து தேவதைகளும் அந்த மனிதனுக்கு அடிபணிய வேண்டும் என்று உத்தரவிட்டாராம். எல்லா தேவதைகளும் கட்டளையை ஏற்று, ஆதாமுக்கு அடி பணிந்தன. ஆனால் மயில் தேவதை மட்டும் மறுத்து விட்டதாம். மண்டியிட மறுத்த மயிலை, இறைவன் சாத்தானாக மாறும் படி படைத்ததாக இஸ்லாமியர் கூறுகின்றனர். ஆனால், அதே காரணத்திற்காக மயில் இறைவனின் பிரதிநிதியாக ஆசீர்வதிக்கப் பட்டதாக யேசிடிகள் நம்புகின்றனர்.

யேசிடி என்றால், "கடவுளின் மக்கள்" என்று அர்த்தம். யேசிடி மதத்தில் புதிதாக யாரும் சேர முடியாது. அந்த மதத்தை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தவரே, மத உறுப்பினர் ஆக முடியும். இதனால் அவர்கள், யூதர்கள் போல தனிமைப் படுத்தப்பட்ட சமுதாயமாக வாழ்ந்து வருகின்றனர். யேசிடி மதத்தை பின்பற்றுபவர்கள் அனைவரும் குர்திய இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களது புனித நூல்களான Zend Avesta, Meshef Roj இரண்டும் குர்து மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இஸ்லாமிய குர்தியர்கள் அரபு மொழியில் இறைவனைத் தொழுகின்றனர். ஆனால், யேசிடி குர்த்தியர்களின் தொழுகை, குர்து மொழியிலேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யேசிடி மதத்தவர்கள், இஸ்லாமுக்கு முந்திய குர்திய பாரம்பரிய மதத்தை பின்பற்றி வந்திருக்க வாய்ப்புண்டு. பெரும்பான்மை இஸ்லாமியர்கள், யேசிடிகளை "சாத்தானை வழிபடுபவர்கள்" என்று இகழ்ந்து வந்தார்கள். காலங்காலமாக அரேபியரும், இஸ்லாமிய குர்தியரும் யேசிடி மக்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்து வந்துள்ளனர். இனக்கலவரங்கள் ஏற்படும் போதெல்லாம், யேசிடி மக்கள் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர். ஓட்டோமான் துருக்கியரின் ஆட்சிக் காலத்தில் லட்சக்கணக்கான யேசிடி குர்தியர்கள் இனவழிப்பு செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் ஆர்மேனியா போன்ற முன்னாள் சோவியத் பிரதேசங்களுக்கு சென்று புகலிடம் கோரினார்கள்.

இருபதாம் நூற்றாண்டில், சோவியத் யூனியனில் மட்டுமே யேசிடிகளின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப் பட்டது. கம்யூனிச அரசாங்கம் பெரும்பான்மை கிறிஸ்தவ மதத்தினரின் மேலாதிக்கத்தை அடக்கி வைத்திருந்ததுடன், சிறுபான்மை மதங்களையும் பாதுகாத்து வந்தது. ஆயினும், சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. கிறிஸ்தவ மதவாத சக்திகளின் ஆதிக்கம் காரணமாக, யேசிடிகளுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான யேசிடி மக்கள், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் கோரினார்கள். துருக்கியில் ஓட்டோமான் இஸ்லாமிய சாம்ராஜ்யம் மறைந்த பின்னரும், யேசிடி மதத்தினர் மீதான அடக்குமுறை தொடர்ந்தது. துருக்கிய பாஸிச அரசு, சிறுபான்மை இனத்தை, அல்லது மதத்தை சேர்ந்த மக்களை வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்தது. ஜெர்மனி துருக்கிய தொழிலாளருக்கு வேலை வாய்ப்பு கொடுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான யேசிடிகள் ஜெர்மனி வந்து தங்கி விட்டனர். பிற்காலத்தில், அகதிகளாக வந்தவர்களும் அந்த சமூகத்துடன் சேர்ந்து கொண்டனர்.

இன்று உலகம் முழுவதும் அரை மில்லியன் யேசிடிகள் வாழ்வதாக கணக்கிடப் பட்டுள்ளது. ஆயினும் பல இடங்களில், அடக்குமுறை காரணமாக தமது மத அடையாளத்தை காட்டிக் கொள்ளாமல் வாழ்வதற்கு சாத்தியமுண்டு. அவர்களையும் சேர்த்துக் கொண்டால், எண்ணிக்கை இன்னுமுயரலாம். பெரும்பான்மை யேசிடிகள், ஈராக்கின் மொசூல் நகருக்கு அருகில் வாழ்கின்றனர். ஜெர்மனியில் 60000 , அர்மேனியாவில் 40000 , ரஷ்யாவில் 30000 யேசிடிகள் வாழ்கின்றனர். மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயரும் யேசிடி இளம்சமுதாயத்தினர் மத நம்பிக்கையை இழந்து வருவதால், அந்த மதத்தவரின் எண்ணிக்கை இன்னும் குறையலாம்.

வட ஈராக்கில், மொசூல் நகருக்கருகில் யேசிடி தலைமை மதகுரு "ஷேக் ஆடி" யின் சமாதி உள்ளது. வருடம் ஒரு தடவை அந்த நினைவகத்திற்கு ஆறு நாள் புனிதப் பயணம் செல்வது யேசிடிகளின் மதக் கடமை. பெல்ஜியத்தில் அகதியாக வாழும் குர்திய இளம்பெண் Bêrîvan Binevsa , யேசிடி மதத்தவர்களைப் பற்றி ஒரு ஆவணப்படம் தயாரித்துள்ளார். இங்கே இணைக்கப் பட்டுள்ள வீடியோவில், யேசிடி மத அனுஷ்டானங்களை கண்டு அறியலாம். ஆவணப்படம் துருக்கி மொழி பேசுகின்றது. பிரெஞ்சு உப தலைப்புகளைக் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக