திங்கள், 7 பிப்ரவரி, 2011

யாழில் இடம்பெறும் இராணுவப்பதிவை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்! - தமிழ்க் கூட்டமைப்பு கோரிக்கை

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் குடும்பப் பதிவு நடவடிக்கையை உடனடியாக அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கேட்டுள்ளது. இவ்வாறு தமிழ் மக்களை இராணுவக் கெடுபிடிக்குள் உட்படுத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலுமுள்ள இராணுவத்தினர் கிராம சேவையாளர் ஊடாகப் பொதுமக்களின் குடும்பப் பதிவை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் முறையிட்டுள்ளனர்.

இந்நடவடிக்கையின் போது ஒவ்வொரு குடும்பத்தின் புகைப்படங்கள் பிடிக்கப்பட்டு இராணுவத்தினர் குடும்பப் பதிவை மேற்கொள் கின்றனர். யுத்தம் நிறைவடைந்து 2 வருடங்களான பின்பும் இராணுவத்தினரின் மேற்படி நடவடிக்கை மிகப்பிழையான விடயம். தமிழ், சிங்கள மக்களிடையே இன ஒற்றுமையை ஏற்படுத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டது. ஆனால், தமிழ் மக்களை எப்போதும் இராணுவ ஆட்சிக்குள் வைத்துக்கொண்டு எவ்வாறு இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.

குற்றவாளிகளை இனங்காண்பதற்காகப் பதிவுகள் எனக் கூறிக்கொண்டு ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் குற்றவாளிகளாக்க இராணுவம் அல்லது அரசு முற்படுகின்றதா?

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளது

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த தனது இடைக்கால அறிக்கையில்,

* உயர்பாதுகாப்பு வலயங்கள் குறைக்கப்படல் வேண்டும்.

* உயர்பாதுகாப்பு வலயங்களில் மக்கள் குடியமர்த்தப்படல் வேண்டும்.

* மிக நீண்டகாலமாகச் சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்படல் வேண்டும்.

* 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப் படல் வேண்டும்.

* இராணுவத் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் விபரங்கள் வெளியிடப்படல் வேண்டும்

ஆகிய விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தது.

அத்துடன் கடந்த 3ஆம் திகதி அரசாங்கத் தரப்பை நாம் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) சந்தித்த போதும் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற ஒன்று சட்ட ரீதியாகக் கிடையாது. தற்போது அங்கு பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு சில படைமுகாம்களே உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விபரங்களை அறிவதற்கு வவுனியாவில் தகவல் வங்கி (Data Bank) அமைக்கப்பட்டுள்ளது என அரச தரப்பினர் தெரிவித்தனர். குடும்பப் பதிவு தேவைதானா?

இவ்வாறு அரச தரப்பு கூறுகின்றபோது மற்றைய பக்கம் இராணுவத்தினர் தற்போது பொதுமக்களிடம் குடும்பப் பதிவுகளை மேற்கொள்கின்றனர். எனவே தமிழ் மக்களைத் துன்புறுத்தி இம்சைப்படுத்துகின்ற மேற்படி இராணுவத்தின் நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம்.

பொலிஸாரின் கடமை என்ன?

குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன்னிறுத்தித் தண்டனை பெற்றுக்கொடுப்பது பொலிஸாரின் கடமை. யுத்தத்திலிருந்து மீண்டுவரும் பிரதேசத்தில் கொள்ளை, கொலை, சட்டவிரோத சம்பவங்கள் இடம்பெறுவது வழக்கம். அவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளைப் பொலிஸார் சட்டத்திற்கு முன் கொண்டுசெல்ல வேண்டுமென இறுக்கமான கட்டளையிடப்பட்டுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அப்படியிருக்கும்போது இராணுவத்தினர் பொதுமக்கள் மீது கெடுபிடிகளை மேற்கொள்வது இராணுவ உயர் மட்டத்தின் உத்தரவா? அல்லது அரசின் உத்தரவில் நடைபெறுகின்றதா? சமாதானத்திற்கான குஷி விருதுபெற்ற யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தலைமையிலான இராணுவம் தமிழ் மக்களைத் துன்புறுத்தலாமா? தமிழ் மக்களும் இந்த நாட்டுப் பிரஜைகள் எனக்கொண்டு குடும்பப் பதிவு நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்.

சகல நிகழ்வுகளிலும் இராணுவப் பிரசன்னம்

கிராம மட்டத்திலிருந்து மாவட்டச் செயலகத்தில் நடைபெறும் அபிவிருத்திக் கூட்டம் வரை இராணுவம் பங்குகொள்கின்றது. எனவே அவசரகாலச் சட்டத்தில் இராணுவ ஆட்சிக்குள்ளேயே தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக