ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

அடக்கி வைக்கப்படும் மக்கள் ஒருநாள் வெடித்துக் கிளம்பி கிளர்ச்சியில் ஈடுபடுவர் - கரு. ஜெயசூரியா

வெகுசனங்களை எப்போதுமே ஏமாற்றவும் அடக்கி வைக்கவும் முடியாது என்பதை எகிப்தைப் பார்த்து இலங்கை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய.

அவ்வாறு அடக்கி வைக்கப்படும் மக்கள் ஒருநாள் வெடித்துக் கிளம்பி கிளர்ச்சியில் ஈடுபடுவர் என்றும் எச்சரித்துள்ளார். எகிப்து நாட்டில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் அதற்கு நல்ல உதாரணம் என்றும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார். எகிப்தில் இப்போது நடப்பவற்றையும் கிழக்கு ஜேர்மனியில் நடந்தவற்றையும் சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார் கரு ஜெயசூரிய. அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

எங்கள் நாடு எல்லா வளங்களையும் கொண்டது. இன்று அந்த வளங்களை ஒரு சிலர் தமது நலன்களுக்காகச் சூறையாடுகிறார்கள். அபிவிருத்தி என்கிற பெயரில் பெரும் தொகையான பணம் சுருட்டப்படுகின்றது. அபிவிருத்தித் திட்டங்களால் தமக்கு ஏதாவது பயன் கிடைக்கும் என்று எதிர்பார்த்து மக்கள் ஏமாந்து போகிறார்கள்.

பொருளாதார வளர்ச்சியால் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆனால்,வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் அவர்கள் துன்பங்களையே அனுபவிக்கிறார்கள். ஆடம்பர சொகுசு ஹோட்டல்கள் கட்டுவதற்காகக் கொழும்பில் அப்பாவி ஏழை மக்கள் வீதிகளில் தூக்கி வீசப்பட்டுள்ளார்கள். நிர்வாகத்தில் உள்ள ஒரு சிலர் பணத்தைக் குவிப்பதற்காக பல ஆயிரக்கணக்கான மக்கள் நடுத் தெருவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார்கள்.

வடக்கில் உள்ள எமது தமிழ்ச் சகோதரர்கள் தமது அடிப்படைத் தேவைகளுக்காகத் தொடர்ந்தும் மிகவும் துன்பப்பட்டு வருகின்றார்கள். மாற்றுக்கருத்துக்கள் அடக்கப்படுகின்றன. சுயாதீனமான ஊடகங்கள் அச்சுறுத்தப்படுகின்றன. பல ஊடகவியலாளர்கள் தமது உயிர்களைக் காவு கொடுத்துள்ளனர். வேறு சிலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்று விட்டனர். தேர்தல் சட்டங்கள் பெருமெடுப்பில் மீறப்படுகின்றன.

அரச ஊடகங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 18ஆவது அரசமைப்புத் திருத்தம் ஜனநாயகத்தின் எல்லா அடிப்படைகளையும் அழித்தொழித்து விட்டது. இவ்வாறான சட்டங்களால் வெகுமக்களை எப்போதுமே ஏமாற்றவும் அடக்கி வைக்கவும் முடியாது என்பதை அரசு புரிந்து கொள்வதற்கான நேரம் வந்து விட்டது. எல்லையைத் தாண்டி விட்டால் மக்கள் தமது சுதந்திரத்திற்காகவும் உரிமைக்காகவும் கிளர்ந்து எழுந்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக