
வெடிக்கும் எரிமலைக்கு முன் நியாயங்கள் பேசுவதில் பயனில்லை..ஆசிய – தென்னாசிய நாடுகள் நோக்கி வருகிறது புயல்...
தற்போது வடக்கு ஆபிரிக்கா நாடுகளிலும், மத்திய கிழக்கிலும் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சி என்பது உலக வரலாற்றில் பதியப்பட வேண்டிய மகத்தான விடயம் என்பதை உலக அறிஞர்கள் படிப்படியாக ஒப்புக்கொள்ள ஆரம்பித்து வருகிறார்கள்.
நடைபெறுவது வெறும் மத்தியகிழக்கு புரட்சி அல்ல அது உலக மக்கள் புரட்சியாக மாறும் அத்தனை உட்கருக்களையும் கொண்டுள்ளது. இப்போது தமது நாட்டிலும் இந்தப் புரட்சி பரவிவிடுமோ என்ற பீதியே சகல ஆட்சியாளர் மனங்களிலும் புயலாக வீசிக் கொண்டிருக்கிறது.
இன்று சீனாவில் இருந்து கிடைத்துள்ள செய்திகள் ஆசிய வட்டகைக்குள் இந்தப் புயல் புகுந்து விளையாடப் போகிறது என்பதை தெளிவாக உணர்த்துகின்றன. ஒரு கட்சி ஆட்சியை வைத்து சீனக்கம்யூனிச சர்வாதிகாரம் தமது கடும்பிடியில் சில மாறுதல்களை செய்ய வேண்டும் என்ற உரையாடலை தமது மட்டத்தில் ஆரம்பித்துள்ளார்கள்.

லிபியா, எகிப்து, ரூனீசியா ஆகிய நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்படவிடாது தடுப்பதற்காக சீனா எல்லா நாடகங்களையும் திரைமறைவில் ஆடியது. ஐ.நா பாதுகாப்பு சபையிலும் எத்தனையோ முட்டுக்கட்டைகளை போட்டது. ஆனால் இதையெல்லாம் தாண்டி இன்று ஐ.நா பாதுகாப்பு சபையில் லிபியாவுக்கு எதிரான தடைகள் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன. இந்த நிகழ்வு சீனாவின் முகத்தில் பூசப்பட்ட மிகப்பெரும் கரியாக இருக்கிறது.
கேணல் கடாபியும், அவரோடு இணைந்து பொது மக்கள் மீது தாக்குதல் நடாத்திய அத்தனை தளபதிகளும் உலகில் எந்த நாட்டுக்கும் பயணிக்க முடியாது என்று பயணத் தடை போடப்பட்டுள்ளது. கடாபிக்கு பாதுகாப்பு வழங்குவோம் என்ற சிறீலங்கா இப்போது தனது தூரப்பார்வையின் மதிகெட்ட தனத்தை உணர்ந்திருக்குமோ தெரியாது.
அதுதவிர கடாபியின் சொத்துக்கள், உடமைகள் உலகின் எங்கிருந்தாலும் அனைத்தும் உறைய வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ உதவிகள் ஆயுத ஏற்றுமதிகள் எதுவும் இனி அங்கு நடைபெறக்கூடாது. மேலும் கடாபி மக்கள் மீது போர்க்குற்றம் புரிந்தார் என்பதை ஆராய தனியான ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதேபோன்ற ஒரு குழு சிறீலங்காவிற்கும் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளுக்கு சிறீலங்கா ஒத்துழைக்காவிட்டால் அவர்கள் பாதுகாப்பு சபையின் அடுத்த அம்புகளை சந்திக்க நேரும். அந்த நேரம் வரும்போது சீனா, இந்தியா இரண்டும் சிறீலங்காவை கைவிடும் காட்சியை தெளிவாகக் காணலாம்.

வடக்கு ஆபிரிக்க நாடுகளில் காலனித்துவத்தை வைத்திருந்து, அந்த நாடுகளுடன் நெருங்கிய உறவுகளை பேணிய நாடு இத்தாலி. கேணல் கடாபிக்கும் இத்தாலிய பிரதமர் சில்வியோ பலர்ஸ்கோனிக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. சமீபத்தில் கடாபியின் 40 வருட கொடுங்கோல் ஆட்சிக்கு பரிசாக ஒரு ஐ.சி ரயில் வண்டியை கொடுத்தவர் பலர்ஸ்கோனி. அவர் நேற்று ரொய்டர் செய்தித்தாபனத்துக்கு பேட்டியில் லிபிய அதிபர் கடாபி மக்கள் எதிர்ப்பைச் சந்தித்து பதவியில் அதிக நாட்கள் நீடித்திருக்க முடியாது என்று தெரிவித்தார்.
இன்று வெளியிடப்பட்ட ஐ.நா பாதுகாப்பு சபைத் தீர்மானத்தால் கடாபியின் குடும்பமே பொறிக்கிடங்கில் மாட்டுப்பட்டுவிட்டது. அவருடைய பிள்ளைகளில் பலர் வெளி நாடுகளில் படிக்கிறார்கள். அனைவரும் பணத்தை வங்கியில் இருந்து எடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் இருந்தால் மக்களால் தண்டிக்கப்படும் அவலம் ஏற்படும், நாட்டை விட்டு வெளியேறினால் போர்க்குற்ற நீதிமன்றுக்கு போக வேண்டும். கடாபிக்கு போராடிச் சாவதைவிட வேறு பாதை எதையும் சர்வதேச சமுதாயம் விட்டு வைக்கவில்லை.

அன்று..
பர்மாவிலும், சிறீலங்காவிலும் நடைபெற்ற மக்கள் புரட்சிகளை அடக்க துணைபோன சீனா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் இன்று நடைபெறும் நிகழ்வுகளை வைத்து, தமது இராஜதந்திரத் தவறுகளை உணர்ந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு. எனினும் முதலாவதாக சீனாவின் அச்சமே சர்வதேச அரங்கில் பெரிதாகப் பேசப்படுகிறது. இந்தப் பிரச்சனைகள் சீன ஊடகங்கள் வழியாக பெரிது படுத்தாமல் சீனா கவனமாகப் பார்த்து வருகிறது. ஆனால் சீனாவில் இணையம் வேலை செய்கிறது. தகவல்கள் அறிவார்ந்த சீனத் தலைமுறையால் அவதானிக்கப்படுகிறது. எரிமலை கக்கும் புகைக் கோடு அங்கே தெரிகிறது…
சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றவரை சிறையில் போட்டுள்ள சீனா தனது இரும்புக் கம்பிகள் உடையும் என்று அஞ்சுகிறது.
2001 ல் ஆரம்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தனது வெளிப்படையான பயங்கரவாதப் பட்டியலில் குறிப்பிட்ட அனைவரையும் ஏறத்தாழ ஒடுக்கிவிட்டது. அடுத்த கட்டமாக இப்போது பட்டியலில் போடப்படாத இலக்குகளை நோக்கித் திசை திரும்பியுள்ளது. நேட்டோ படைகள் இல்லாமலே காரியம் கச்சிதமாக நடைபெற்றும் வருகிறது.
அக்காலத்து ஜேர்மனிய இராஜதந்திரி பிஸ்மார்க் அன்றைய ஜேர்மனிய சக்கரவர்த்தி பேர்டினன்ட் வில்லியத்துக்கு ஒரு விடயத்தை தெளிவாக சொன்னான். உலகப் பொருளாதாரத்தில் முதலிடத்திற்கு வருவதற்கு முயற்சிக்காதே, குடியேற்ற நாடுகளை அமைக்க முயற்சிக்காதே. இரண்டையும் செய்தால் ஜேர்மனியில் இரத்த ஆறு ஓடும் என்று கூறினான். ஆனால் பேர்டினன்ட் வில்லியம் அவனைப் பதவி விலத்தி முதல் உலகப் போருக்கு ஜேர்மனியை களமாக்கினான். அதே தவறை சர்வாதிகாரி ஹிட்லரும் இழைத்து இரண்டாவது உலகப் போரை வரவழைத்தான்.
சென்ற வாரம் சீனா பொருளதார வளர்ச்சியில் ஜப்பானை முந்திக் கொண்டு உலகின் இரண்டாவது இடத்தைப் பிடித்துக் கொண்டது. அது மட்டுமல்லாமல் சிறீலங்கா முதல் கொண்டு லிபியாவரை சகல இடங்களிலும் தனது காலனித்துவ ஆதிக்கக் கரங்களை நீட்டுகிறது. மேலும் ஆபிரிக்க வர்த்தகத்தில் அமெரிக்காவை முந்திச் சென்றுவிட்டது.
பேர்டினன்ட் வில்லியம் செய்த அத்தனை தவறுகளையும் செய்த சீனாவுக்குள் இந்த மக்கள் புரட்சி பாயும் என்றே கருத வேண்டியுள்ளது. அணு ஆயுதம், உலகின் பெரிய இராணுவம் இரண்டையும் மக்கள் புரட்சியால்தான் தோற்கடிக்கலாம். இன்று ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சி உலக மக்கள் புரட்சியாகி பலரைத் தோற்கடிக்கப் போகிறது.
இதற்குப் பயந்து மக்களுக்கு அதிக உரிமைகளை கொடுத்தாலும் அது வெடிக்கும்..
உரிமைகளை கொடுக்காவிட்டாலும் அது வெடிக்கும்…
வெடிக்கும் எரிமலைக்கு நீரை ஊற்றி அணைக்கவா முடியும்…?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக