இன்றுமுதல் லிபியாவிற்குள் இன்ரநெற் தடை..
பல தமிழ் இணையப்பக்கங்கள் முடப்பட்டது ஏன்..
இன்றைய உலக சர்வாதிகார அரசுகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது இணையமே. லிபியாவும், எகிப்தும், சிறீலங்காவும், சீனாவும் இந்த நோக்கில் இடம் பெறுகின்றன.
கடந்த 40 வருடங்களாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடாத்தி வருகிறார் கேணல் கடாபி. நாட்டின் மொத்தத் தேசிய வருமானத்தில் 90 வீதத்திற்கு மேல் இராணுவத்திற்கு கொட்டி, அதன் மூலம் தன் அதிகார நாற்காலியைப் பாதுகாத்தும் வருகிறார். இவ்வளவு வலு இருந்தும் கேணல் கடாபி போரைப் பிரகடனப்படுத்தியிருப்பது இணையத்திற்கு எதிராகத்தான்.
காரணம்,
இப்போது வடக்கு ஆபிரிக்காவில் தொடங்கியுள்ள மக்கள் போராட்டங்கள் மிகப்பெரியளவில் தீவிரம் பெறுவதற்கு இணையமே ஆதார சுருதியாக இருந்து வருகிறது. ஒரு நாட்டில் ஆர்பாட்டத்தில் குதித்துள்ள உணர்வாளர்கள் மற்றய நாடுகளின் சகோதரர்களுடன் இணைந்து கொள்ள ஆதாரமாக இருப்பது இணையமே.
இன்று, அதிகார வர்க்கம் அச்சப்படுவது அணுகுண்டிற்கல்ல.. ஆயுதப் புரட்சிக்கல்ல.. மக்கள் சக்தியை ஒன்றிணைக்கும் இணையத்திற்கே..

லிபியாவில் ஆரம்பித்துள்ள கடாபிக்கு எதிரான போராட்டங்களில் பேஸ்புக் மிக முக்கியமான பாத்திரம் வகித்து வருகிறது. கடந்த வியாழன் லிபிய ஆர்பாட்டக்காரர் , உலக தினம் , என்ற தலைப்பின் கீழ் நடாத்திய போராட்டத்தில் சுமார் 22.000 பேரை கொத்தாக ஆர்பாட்டக் களமிறக்க பேஸ்புக் உதவியாக இருந்திருக்கிறது.
ஆக, கடாபியின் கண்ணுக்குள்ளேயே விரலை விட்டு ஆட்டத் தொடங்கிவிட்டது இணையம்.
லிபியாவில் நடைபெறும் போராட்டங்கள் அனைத்தும் கடும் வன்முறையால் அடக்கப்படும், இன்று முதல் லிபியாவிற்குள் இன்ரநெற் தொடர்பே இருக்காது என்று சற்று முன் கடாபி கொக்கரித்துள்ளார். இதுபோல எகிப்திய சர்வாதிகாரி கொஸ்னி முபாரக் எஸ்.எம்.எஸ் குறுஞ்செய்திகளைக் கூட அனுப்ப முடியாது தடை செய்தார். வடக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கில் வெடித்துள்ள அத்தனை மக்கள் போராட்டங்களும் ஆயுதம் இல்லாத புரட்சிகளாக இருந்தாலும், அத்தனைக்கும் வலுவூட்டும் பிரதான ஆயுதமாக இருந்து வருவது இணையமே.
இன்று..
பஃரினில் வெளியான செய்தி ஏடுகளை புரட்டினால் அவை இற்றுப்போன மன்னருக்காக செய்தி எழுதுவதைப் படிக்க முடிகிறது. இணையம் மட்டும் இல்லை என்றால் பஃகரினில் புரட்சி கைகூடியிருக்காது.
பத்திரிகைகள், சஞ்சிகைகளை ஆதாரமாகக் கொண்ட கடந்தகால ஊடகபலம் ஆட்சியாளருக்கு சாதகமாக அமைந்தது. பத்திரிகைகளுக்கு விளம்பரம் வழங்கி அவற்றைக் கைக்குள் போட்டு, பொய்ச் செய்தி வெளியிட்டு வந்த அதிகார வர்க்கம் இன்று இணையத்தின் வரவால் குலுங்கிப்போயுள்ளது.

யாருக்கும் பயப்படாத சீனாவின் கருங்காலிச் சர்வாதிகாரிகளே பயந்து நடுங்கியது இணையத்திற்குத்தான். அவர்கள் கூகுளை தடை செய்தது இதற்கு நல்லதொரு உதாரணமாகும். இதுபோல உலகின் ஊழல்கள் எல்லாம் விக்கிலீக்ஸ் வழியாக கசிந்து நாற்றமடிக்கவும் இணையமே மேடை போட்டுக் கொடுத்தது. இதனால்தான் இன்று எங்கெல்லாம் போலி ஒட்டுண்ணி அதிகார வர்க்கம் இருக்கிறதோ அங்கெல்லாம் இணையத்திற்கு எதிரான போர்ப் பிரகடனத்தைக் கேட்க முடிகிறது.
இணையத்திற்கு எதிராக எந்த அரசு திரும்புகிறதோ.. அந்த அரசில் பாரிய ஓட்டை இருக்கிறது என்பதை இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
இனி சிறீலங்காவிற்குள் வருவோம்…
சிறீலங்கா என்றதும் இந்த இழவிற்குள் சிறீலங்கா என்ற ஏழை நாட்டையும் ஏன் இணைக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எழும். இருப்பினும் தற்போது சிறீலங்கா அரசுக்கு ஆதரவற்ற பல தமிழ் இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதால் இதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இணைய மையத்திடம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் நமக்கு அவசியமானவை.
இணையத்தை வைரஸ் அனுப்பி, கேக் பண்ணி நிறுத்தும் காலத்தைத் தாண்டி, உத்தியோக பூர்வ இலச்சினையுடன் சில இணையப்பக்கங்களை நிறுத்தும் படி கடிதங்கள் எழுதப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனால் பல தமிழ் இணையங்கள் வெளியாகும் தலைமைக் காட்டிஸ்க் பெட்டியையே அவை வெளிவர முடியாதபடி பூட்டப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது. பொய்யான தகவல்களைக் கொடுத்து இந்தக் கடிதங்கள் புனையப்பட்டுள்ளமையும் கவனிக்கத்தக்கது.
இதைக் கேட்டதும் ஆகா பார்த்தீர்களா இது தப்பல்லவா..? என்று யாரும் அலற வேண்டிய தேவையில்லை, உண்மையில் இதை யார் செய்தாலும் அவர்களுக்கு யாதொரு பயனும் ஏற்படப் போவதுமில்லை.

ஏன்..?
தற்போது பிரான்சில் நடக்கும் ஜீ 20 நாடுகளின் மாநாடு வறுமையும், பொருட்களின் விலையேற்றமும் மேலும் பல நாடுகளில் மக்கள் புரட்சியை ஏற்படுத்தும் என்று துல்லியமாகத் தெரிவிக்கிறது. சிறீலங்காவில் வெளியாகியுள்ள 5000 ரூபா நோட்டுக்கள் ஒவ்வொன்றுமே அந்த அரசை ஆடவைக்கப்போகும் கடதாசி இணையப்பக்கங்களே என்பதை காலம் விரைவாக உணர்த்தும். இதை ஜீ – 20 மாநாட்டின் குரல்களில் இருந்து எடைபோட முடிகிறது. ஆகவே சிறீலங்கா அரசுக்கு எதிராக எழுத வேண்டிய தேவையும், அந்த நாட்டு செய்திகளுக்கு முதன்மை கொடுக்க வேண்டிய தேவையும் எதிர்கால இணைய உலகிற்கு இருக்கும் என்றும் கூறமுடியவில்லை.
யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போடும்போது மற்றவரும் அதன் தலையில் மண் அள்ளிக் கொட்ட வேண்டிய அவசியமில்லை. ஒரு சில தமிழ் இணையப் பக்கங்களை, பொய்க் கடிதம் எழுதி இழுத்து மூடினால்போல் இலங்கையில் பாலும் தேனும் ஆறாக ஓடப்போவதுமில்லை..
ஏனென்றால்..
இணையம் என்பது உலகம் கடந்த அரசாக இருக்கிறது, அது எதிர்கால உலகத்தை மாற்றிப் போடப்போவதை இனி யாராலும் தடுக்கவும் முடியாது.
மாற்றங்களை ஏற்று அதற்கமைய மாறிச் செல்வதே இப்போதைக்கு சிறந்த வழியாகும். எந்த நாட்டில் இருந்தாலும் போலி அதிகார வர்க்கத்தினர் இன்று கிளம்பியுள்ள மக்கள் சக்திக்கு வழிவிட வேண்டும், இல்லையேல் காலம் அவர்களைக் கைவிட்டு புதிய வழியை வரைந்து செல்லும்.
இணையப்பக்கங்களை மூட வேலை செய்வோர் தமது கதிரையும் கேணல் கடாபியின் ஆட்டங்காணும் நாற்காலியையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இரண்டும் ஒன்றென்பதை எளிதில் உணரலாம்.
- அலைகள் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக