தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தாயார் வே.பார்வதியம்மாளின் உடல் எரியூட்டப்பட்ட இடத்தில் இருந்த சாம்பலைக் கிளறி எறிந்து நாய்களைச் சுட்டுப் போட்ட அநாகரிகமான செயல் அனைத்துலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் நேற்றுமுன்தினம் பார்வதியம்மாளின் உடல் வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
உடல் தகனம் முடிந்து உறவினர்கள் வீடு திரும்பிய பின்னர் நள்ளிரவில் இனந்தெரியாத நபர்கள் அந்த இடத்தை அநாகரீகமான முறையில் கேவலப்படுத்தியிருந்தனர்.
சாம்பல் மேடு கிளறி எறியப்பட்டிருந்ததுடன் அதன் மீது மூன்று நாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வீசப்பட்டிருந்தன.
நேற்றுக்காலை தகனம் செய்யப்பட்ட இடத்தில் சமய ரீதியான சடங்குகளைச் செய்யச் சென்ற உறவினர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இந்தச் சம்பவம் இன்று அனைத்துலக ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம்பெற்றுள்ளது.
வொசிங்டன் போஸ்ட் உள்ளிட்ட அனைத்துலக ஊடகங்கள் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் அளித்திருந்தன.
இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். இதை யார் செய்திருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என்று சிவாஜிலிங்கம் கூறியதாக வொசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரபாகரனின் பெற்றோர் அரசியலில் ஈடுபடாத போதும் போரின் முடிவில் அவர்களும் சிறிலங்கா இராணுவத்தினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தாகவும் வொசிங்டன் போஸ்ட் கூறியுள்ளது.
அனைத்துலக ஊடகங்களில் இந்தச் செய்தி வெளியாகியிருப்பது சிறிலங்கா அரசுக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பார்வதியம்மாள் தகனம் செய்யப்பட்ட இடத்தை கிளறி நாசப்படுத்திய- அநாகரின் செயல் யாழ்ப்பாணத்தில் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன்-
“ 81 வயதான மூதாட்டியை எரித்த சாம்பலைக் கிளறி அந்த இடத்தில் நாய்களின் உடலை போடுவது என்பது வெறுக்கத்தக்க அநாகரிகமான செயலாகும்.
மனிதத்தன்மையற்ற இந்தச் செயலுக்கு சிறிலங்கா அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த மாதிரியான செயலை யார் செய்திருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல் றோகண விஜேயவீரவின் தாய்க்கோ அல்லது தந்தைக்கோ நடக்கவில்லை.
ஜேவிபி உறுப்பினர்களின் பெற்றோருக்கு இப்படி நடக்கவில்லை. ஆனால் பார்வதியம்மாளுக்கு நடந்துள்ளது.
இதற்கு சிறிலங்கா அரசுதான் பதில் சொல்ல வேண்டும்“ என்று கூறியுள்ளார்.
அதேவேளை, இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட பேராசிரியர் இரா.சிவசந்திரன் -
“ இதுபோன்ற அநாகரிகமான செயல் உலகின் எந்தப் பாகத்திலும் இதுவரை இடம்பெற்றதாக அறியவில்லை.
ஆனால் இந்தச் செயல் இங்கு நடந்தேறியிருக்கிறது.
தமிழ் மக்களை அவமானப்படுத்துவதற்காகச் செய்த இந்த செயலால் தமிழ் மக்கள் அவமானப்படவில்லை.
இந்தச் செயலைப் புரிந்தவர்கள் தான் அவமானப்பட வேண்டியுள்ளது. மனிதநேயம் உள்ள எவரும் இதனை செய்திருக்க மாட்டார்கள்.“ எனறு கூறியுள்ளார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக