சனி, 26 பிப்ரவரி, 2011

ஐ.நா பாதுகாப்புச் சபை மீண்டும் அவசரக்கூட்டம்

லிபிய சர்வாதிகாரி கடாபிக்கு எதிரான தடைகளை முன் வைப்பதற்காக ஐ.நாவின் பாதுகாப்பு சபை இன்று அவசரமாகக் கூடியது. உலகயுத்தத்தில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள், 1990களில் யுகோசுலாவியாவில் நடைபெற்ற போர்க்குற்றம் போன்றவற்றிற்காக ஐ.நா வைத்துள்ள அதே பிரேரணைகள் இன்று லிபியா மீதும் விதிக்கப்பட்டன. இதனால் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றின் விசாரணைகளை கடாபி அரசு சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமீபகாலத்தில் ஐ.நாவால் இயற்றப்பட்ட மிக மோசமான தீர்மானம் இதுவென்று கூறுகிறார் வோஷிங்டன் செய்தியாளர். அதேவேளை சீனா, ரஸ்யா ஆகிய இரண்டு வீட்டோ அதிகாரமுள்ள நாடுகளும் கடாபிக்காக பூட்டிய அறைக்குள் குரல் கொடுத்துவிட்டு, வெளியில் நல்ல பிள்ளை நாடகம் ஆடுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நாடுகள் அடுத்த ஆர்பாட்டங்களை சந்திக்க இடமிருப்பது கவனிக்கத்தக்கது. இவ்விரு நாடுகள் காரணமாகவே ஐ.நா விதித்ததடைகள் வெளிவர தாமதமானதாகக் கூறப்படுகிறது. இது இவ்விதமிருக்க இன்று அதிகாலை கடாபியின் மகன் பத்திரிகையாளரைக் கூட்டிப் பேசினார். அப்போது ஆயுதம் தரித்த போராளிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடாத்தவும், யுத்த நிறுத்தம் ஒன்றுக்கும் தயார் என்றார். லிபிய வீதிகளில் ஆர்பாட்டக்காரருடன் ஆயுதம் தரித்துநிற்பது அல் குவைடா பயங்கரவாதிகளே என்றும் தெரிவித்தார். அவர் பத்திரிகையாளர் மாநாட்டை அறிவிக்க மறுபுறம் மாடியில் தோன்றிய கடாபி எல்லோரும் எரிவதற்கு தயாராகுங்கள் என்று முழக்கமிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக