
இடம்பெயர்ந்த நிலையிலுள்ள மக்களின் மீள் குடியேற்றத்தினை துரிதப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச சமூகமும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன என்று ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் ஜீன் லெம்பட் தெரிவித்தார். யுத்தத்திற்கு பின்னரான விடயங்களில் முன்னுரிமை கொடுக்கப்படுகின்ற
விடயங்களை வகைப்படுத்தல் தொடர்பில் இலங்கை விஜயத்தின் போது விரிவாக கலந்துரையாடியுள்ளோம். அதேநேரம் மெனிக்பாம் முகாம்களில் இன்னும் மக்கள் வாழ்கின்றனர் அவர்கள் வாழ்ந்த பகுதிகளுக்கே செல்லவேண்டும்.
அத்துடன் அவர்களுக்குள்ள தேவைகளும் நிறைவு செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் இலங்கைக்கு எடுத்துரைத்துள்ளோம் என்றும் அவர் கூறினார் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை என்பது ஒரு மூடிய புத்தகம். அந்த சலுகையை மீண்டும் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் எம்மால் தீர்மானிக்க முடியாது.
அதனை ஐரோப்பிய ஒன்றியமே தீர்மானிக்கவேண்டும்.இலங்கை அரசாங்கம் விரும்பினால் அது தொடர்பில் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கலாம் என்றும் லெம்பட் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை நிலவரம் தொடர்பில் ஆராய்வதற்காக விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் ஜீன் லெம்பட் தலைமையில் கொழும்பிலுள்ள சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்ற ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவில் ஆறுநாடுகளை சேர்ந்த ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன குழுவொன்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
அந்த தூதுக்குழு இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷ. எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எம்.பிக்கள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் ஜனாதிபதியுடனான சந்திப்பு இரத்து செய்யப்பட்டது.
வடக்கில் வவுனியா, மெனிக்பாம் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததுடன் யுத்தத்திற்கு பின்னரான நிலைமைகள் தொடர்பிலும் ஆராய்ந்தோம். அங்கு மக்களுக்கு தேவையானவற்றை உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்னெடுத்துவருகின்றன.
வடக்கில் கண்ணிவெடி அகற்றல்,கல்வி நிகழ்ச்சிகள் மேம்படுத்தப்படுகின்றன என்பதுடன் ஐரோப்பிய ஒன்றியமும் அதிகமான வேலைத்திட்டங்களுக்கு நிதியுதவியளித்துள்ளது. இவ்விஜயத்தின் போது யுத்தத்திற்கு பின்னரான நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். மீள் உருவாக்கம் மற்றும் மீள் அபிவிருத்தி தொடர்பில் எங்களுடைய அவதானிப்புகளை செலுத்தியுள்ளோம்.
உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பணிகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும். அதன் தேவைப்பாட்டை மக்கள் உணருகின்றனர்.
நீதி மற்றும் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக தமிழ்மொழி தெரிந்த பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் மேலதிக இராணுவ பிரசன்னம் தொடர்பில் மக்கள் எம்மிடம் கேள்வியெழுப்பினர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடினோம்.
இறுதி யுத்தகால போர்க்குற்றம் தொடர்பில் எங்கும் கலந்துரையாடப்படவில்லை என்றாலும் மனித உரிமை மீறப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அக்கறை கொண்டுள்ளது. மேலதிகமான இராணுவ பிரசன்னம் மற்றும் தடுப்புகாவலில் இருப்போர் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
முரண்பாடுகளுக்கு பின்னர் வடமாகாணத்தில் எவ்வாறான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பில் வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடினோம். ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற குழுவிற்கும் ஐ.நா குழுவிற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. எமது செயற்றிட்டங்கள் தொடர்பான அறிக்ø க பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். எதனை செய்யவேண்டும் எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதை தொகுத்தளிப்போம்.
அதேவேளை, தடுப்புக் காவலில் உள்ளவர்கள் மற்றும் அவசர காலச் சட்டம் என்பன குறித்து நாம் அக்கறை கொண்டு செயற்படுகின்றோம். பாராளுமன்றத்திற்கான எமது விஜயத்தின்போது அவசரகாலச் சட்டம் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து விவாதிக்கப்பட்டதை நாம் அவதானித்தோம். தடுத்துவைத்திருப்பதற்குள்ள உரிமை அல்லது அதிகாரம் ஆகியவற்றின் கீழ் பொலிஸார் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம் எனக் கருதுகின்றோம்.
சில பகுதிகளில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை நாம் அவதானித்தோம். மெச்சத்தக்க வகையில் அரசு அபிவிருத்தி மற்றும் மீள் குடியேயற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. என்றாலும் மோதல்கள் முடிவடைந்த பின்னரான காலப்பகுதியில் இயல்பு நிலைமை மீளத் திரும்புவதில் சவால்கள் காணப்படுகின்றன.
மீள் குடியேற்றப் பணிகளை துரிதப்படுத்துமாறு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்ற அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியமும் துரித மீள் குடியேற்றத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
யாழ் குடாநாட்டிற்கான எமது குழுவின் விஜயத்தின் போது, அரச அதிபர், ஆளுநர் போன்ற தரப்பினரை சந்திக்கக் கிடைத்தது. அங்கு மூன்று திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. கண்ணி வெடி அகற்றல், கண்ணிவெடி குறித்த விழிப்புணர்வு, இடைக்கால தங்குமிடங்கள் குறித்தே இதன்போது கலந்து பேசப்பட்டது என்றார்.
அப்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,
எமது விஜயத்துக்கும், விடுதலைப்புலிகள் அமைப்பினை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்ததற்கும் சம்பந்தம் இல்லை. அத்துடன் ஐ.நா.வின் சந்திப்புகளுக்கும் எமது குழுவுக்கும் எதுவிதத் தொடர்பும் இல்லை. ஐ.நா. தனியொரு அமைப்பு அவற்றின் நடவடிக்கைகள் பல்வேறு கட்டமைப்புகளைக் கொண்டவை.
அதேவேளை, ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை இடைநிறுத்தப்பட்டமைக்கு காரணம் நாட்டில் நல்லாட்சி நிலவ வேண்டும் என்ற நோக்கத்தினாலாகும். அரசாங்கம் விரும்பினால் அச்சலுகையை பெற்றுக்கொள்வதற்குரிய முயற்சியை மேற்கொள்ளலாம் அது தொடர்பிலான தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக